இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், கிறிஸ்மஸ் கொண்டாட சென்னை நகரம் தயாராகி வருகிறது. கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் ஸ்டார், தோரணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் கேக் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
கருணையின் உருவாகவும், சேவையின் தந்தையாகவும் கிறிஸ்தவ மக்களால் பணிந்து தொழப்படும் ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ம் அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஐரோப்பிய வீதிகளிலும், வீடுகளிலும், கடைத் தெருக்களிலும் பண்டிகையின் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதற்கு சற்றும் குறையாத வகையில் தமிழ் நாட்டிலும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.குழந்தை ஏசுவை வரவேற்கும் வகையிலும், கிறிஸ்மஸ் பண்டிகையின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் கிறிஸ்மஸ் ஸ்டார் கட்டி தொங்க விடப்படும். இது புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவ வீட்டு வாசலிலும் ஒளிர்ந்து அழகாக காட்சியளிக்கும். இந்த ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் மாற்று மதத்தினரும் வாங்கிச் செல்கின்றனர். பணப்பிரச்சனைகள் இருந்தாலும் இந்த ஆண்டு ஸ்டார் விற்பனை நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள் விற்பனையாளர்கள்.
கிறிஸ்மஸ் பண்டிகை நேரத்தில் கிறிஸ்தவர்கள் வீட்டை அலங்காரம் செய்வதே ஒரு கலையாக இருக்கும். சின்ன வீடாக இருந்தாலும் அதனை அவ்வளவு அழகாக வண்ணத் தோரணங்களால் அலங்காரம் செய்து அசத்துவார்கள். குடில் அமைத்து, கிறிஸ்மஸ் மரம் வைத்து, அதில், குட்டி குட்டி மணி, சின்னச் சின்ன விளங்குகள் பொருத்தி அழகு செய்வார்கள். இந்த ஆண்டு புதிய வடிவத்திலான பல வண்ண மயமான அலங்காரப் பொருட்களும், தோரணங்கள் சந்தைக்கு வந்துள்ளன.
கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்று பரிசுப் பொருட்களை நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகளுக்கு கொடுப்பது. அப்படி விதவிதமான பரிசுப் பொருட்களைத் தேடிச் சென்று வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர். குறிப்பாக ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்பிரஸ் அவென்யு போன்ற ஷாப்பிங் மால்களில் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
Chennaities get ready to celebrate Christmas, and buy cakes, starts etc