அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி போக்குவரத்து ஊழியர்கள் அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால் சென்னை கோயம்பேடு, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஓட்டுனர்கள் பேருந்துகளை பாதியிலேயே நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அடிப்படை மற்றும் தர ஊதியத்துடன் சேர்ந்து 2.57 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் என்பது போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை. இவற்றில் 2.40 சதவீதம் மட்டுமே தர முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் இது தொடர்பாக அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் ஊழியர் சங்கத்தினரின் பேச்சுவார்த்தை நடந்தது. 2.57 சதவீத ஊதியம் உயர்வு தர அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால் சுமார் 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீரென பேருந்துகளை நடுவழியில் நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை